Kavithai
Sunday, 18 November 2012
Sunday, 10 April 2011
தேர்தல் கவிதை
உங்கள் வாக்கு யாருக்கு?
இந்தத் தேர்தலிலும்
முத்திரையிட வேண்டுமா?
நேற்று வென்றவர்கள்
விரலை வெட்டினர் ....
இனிமேல் அனைவருக்கும்
மோதிரம் பரிசாம்!
விலைவாசி ஏழைகளின்
துகிலை உரிகின்றது!
பாஞ்சாலியாய்க் கதறும்....
இந்திய ஜனநாயகம்!
தேர்தல்கள் நாற்காலிக்கா?
இல்லை நாட்டிற்கா?
ஏதோ சாதிக்குமாம்
எங்கும் சாதித் "தீ "!
மயக்கும் வார்த்தைகளில்
மந்திர மத வெறி !
பொற்கால ஆட்சியில்
கற்கால சிந்தனைகள்!
மூட்டைப் பூச்சிகளுக்காக
இனியும் ஒடலாகாது....
கேடிகளுக்கும் கோடிகளுக்கும்
இங்கு அரசியல் அதிகாரங்கள்!
வரும் கேட்டினை
யார் தடுப்பார்?
இந்தத் தேர்தலிலும்
கட்டாயம் வாக்களிக்க வேண்டும்....
மத வெறி மாயத்திடவே!
மனிதநேயம் காத்திடவே!
- ஆசுரா
( தீக்கதிர் 21 -01 -2001 )
Thursday, 31 March 2011
கவிதைகள் 2001 - ஆசுரா
சிறகுகள்
சிறகுகள் சுமைகளல்ல ....
எப்போதும் சுகம் தான்
பறக்கும் திசை தெரிந்துவிட்டால் !
- ஆசுரா
(பாக்யா ஜன 5-11 ;2001)
சினிமா பாடல்
நெற்றிக்கண் திறக்க
ஆண்டவனும் வரவில்லை!
சுட்டிக் காட்ட
நக்கீரர்களும் இல்லை!
தடம் புரண்டு
ஒலிக்கின்றன .....
தமிழ்த் திரைப்படப் பாடல்கள்!
- ஆசுரா
(கல்கண்டு 11 .01 .2001 )
மனம்
இன்னும் இன்னும்
முயற்சி செய்து
பார்க்கலாம் தான்.....
முடிவு தெரியாத
ஒற்றையடிப் பாதையாய்...
நீள்கின்றதே
அவளின் மனம்!
- ஆசுரா
(சரவணா ஸ்டோர்ஸ் 14 -01 -2001 )
வாட கண்ணா வா!
இரவல் பிள்ளை வாங்கி
இன்னும் எத்தனை நாள்
பாதமிட்டு நான் மகிழ?
அரிசி மாவில் அச்சிட்ட
அந்த நாளும் இனி இல்லை.....
சாக்பீசால் வரையவும் மனமில்லை
வெறுமையாய் இருக்கின்றன அறைகள்!
கிருஷ்ணா
உனக்காகக் காத்திருப்பது அறியாயோ?
"மலடி" பட்டம் விட்டு ஓடிடவே
மகனாய் என் மடியில்
என்று நீ தவழ்வாய்?
பதில் சொல்
மழலையாய் உன் பாதம்
என் வீட்டில் பதிந்திடவே .....
நான் காத்திருக்கிறேன்
ஒவ்வொரு கிருஷ்ணா ஜெயந்தியிலும்!
-ஆசுரா
(மாலைமதி 18 -01 -2001 )
Sunday, 27 March 2011
காதல் கவிதை - ஆசுரா
சூன்யம்
மார்கழிப் பனியில்
காலை அழகைக் காணவும்
எனக்கு எண்ணமில்லை!
மழை நாளில்
தூறல் பிடித்து விளையாடவும்
எனக்கு விருப்பம் இல்லை!
ஓடும் பேருந்தில்
ஜன்னலில் வேடிக்கை பார்க்கவும்
எனக்கு ஆவலில்லை!
நிலா முற்றத்தில்
நண்பர்களோடு கதை அளக்கவும்
என்னக்கு நாட்டமில்லை!
பூக்களோடு கைகள் குலுக்கி
இதமாய்ப் புன்னகைக்கவும்
எனக்கு இதயமில்லை!
வண்ணத்துப்பூச்சியின் முதுகிலேறி
சின்னக் கவிதைகள் இயற்றவும்
எனக்கு இயலவில்லை!
நீர்க்குமிழியை ஊதி
அது உடைந்த பின் அழவும்
எனக்கு மனமில்லை!
அலைகள் துரத்த நான் ஓட
கலைப் பொருளாய் சிப்பி எடுக்கவும்
எனக்கு ஆசையில்லை!
அகல் விளக்கின் நெருப்பில்
வேகமாய் விரல் விட்டு நீக்கவும்
எனக்கு விருப்பம் இல்லை!
நுண்ணிய நிகழ்வுகளிலெல்லாம்
ரசிக்கும் சிந்தை இல்லை ...
அன்பே நீ சென்ற பின்னே!
- ஆசுரா
(காலைக்கதிர் 10 -02 -2002 )
Tuesday, 22 March 2011
ஆசுரா - கவிதை
காகிதப்பூ
மலர்த்தோட்டம் கண்டு மகிழ்ந்து
காகிதப்பூக்களில் தேனைத் தேடியது வண்டு...
விரக்தியில் பட்டதாரி.
- ஆசுரா
( தீக்கதிர் - 19 -09 1999 )
வகுப்பு அறை
வகுப்பு அறை
தம்பியும் தங்கையும் நாங்கள்
தரணி ஆளப் புறப்பட்டோம்
கருப்பு வெள்ளை எங்களுக்குள்
நிறமில் என்றும் பேதமில்லை
மதங்களில் நாங்கள் பலரானோம்
மாணவர் என ஒன்றானோம்
சாதிகள் சண்டைகள் வெளியிலே
சமரச சகோதரத்துவம் எங்களிலே
வாருங்கள் தோழர்கள் எங்களுடனே
வகுப்புவாதத்தை ஒழித்திடவே!
- ஆசுரா
(பிரசுரமான முதல் கவிதை - தீக்கதிர் 6 -04 - 1997 )
Friday, 11 March 2011
My Profile
I am Dr.A.Raja
My pen name is Asura
You can send back your feedbacks to asura.raja@gamil.com
My pen name is Asura
You can send back your feedbacks to asura.raja@gamil.com
Subscribe to:
Comments (Atom)